இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கிம்பெர்லி நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ் அசத்தலாக விளையாடி முறையே 84, 45 ரன்கள் எடுத்தனர். 36.1 ஓவரில் மிதாலி ராஜ் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 155 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. மீதமுள்ள ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 213 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து, 214 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா அணியில், கேப்டன் நிகெர் மட்டும் நிலைத்து நின்று 101 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 7 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 84 ரன்கள் எடுத்த மந்தனா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று தென்னாப்பிரிக்கா அணியை 118 ரன்களில் சுருட்டி, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகள் வித்திசாயத்தில் வெற்ற நிலையில், மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தன் பங்கிற்கு அசத்தியுள்ளது.