மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்நிலையில், பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராக இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடியது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
2வது பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் கே.எல்.ராகுல் 55 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் சஹால் ஆகியோருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி அடுத்ததாக வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. தொடர்ந்து வரும் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
இதையும் படிக்க: பேட்டிங் செய்ய தாமதம்: எதிரணி பேட்ஸ்மேனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பதி ராயுடு