வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலியும் 4 ரன்னில் ஏமாற்றினார்.
சற்று நேரம் நிலைத்து நின்ற ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 80 ரன்னிற்கும் மூன்று முக்கிய விக்கெட்களை இந்திய அணி இழந்தது. பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, பின்னர் அடித்து விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பந்த் 71 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஷப் ஆட்டமிழக்கும் போது, 39.4 ஓவர்களில் இந்திய அணி 201 ரன்கள் எடுத்திருந்தனர்.
பின்னர் வந்த கேதர் ஜாதவ் தன் பங்கிற்கு 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 21 ரன்களில் அவுட் ஆக, இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் காட்டரெல், பவுல், ஜோசப் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். 288 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.