வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்துள்ளது.
விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரோகித் நிதானம் காட்டினாலும் தொடக்கத்தில் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி முதலில் அரைசதம் அடித்தார்.
பின்னர், அதிரடியை கையில் எடுத்த ரோகித் சர்மா முதலில் சதம் விளாசினார். அவரை தொடர்ந்து சதம் அடித்த ராகுல் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 227 ரன்களுக்குதான் தனது முதல் விக்கெட்டை இழந்தது. பின்னர், வந்த கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
விக்கெட் வீழ்ந்தாலும் தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி 150 ரன்களை விரைவில் எட்டினார் ரோகித் சர்மா. அதிரடியாக விளையாடியதால் விரைவில் அவர் இரட்டை சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. இருப்பினும், 159 ரன்கள் விளாசிய நிலையில் காட்டரெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா ஆட்டமிழந்ததால் இந்திய அணி 375 ரன்களுக்கு மேல் எட்டுமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால், களத்தில் நிகழ்ந்ததே வேறு. ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் வெஸ்ட் அணியின் பந்துகளை பதம் பார்த்தனர். சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ரிஷப் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் 32 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் காட்டரெல் இரண்டு விக்கெட் சாய்த்தார்.