இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் கருணரத்னே 10, குசல் பெராரா 18 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினர்.
அதனை தொடர்ந்து குசல் மெண்டீஸ் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர், பெர்னாண்டோ 20 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இலங்கை அணி 55 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. மேத்யூஸ் - திரிமன்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த இருவரின் விக்கெட் எடுக்க இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு நீண்ட நேரம் பலன் கிடைக்கவில்லை. திரிமன்னே 53 ரன்கள் எடுத்து குல்தீப் ஓவரில் அவுட் ஆனார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் 115 பந்துகளில் சதம் அடித்தார். அவருக்கு டி சில்வா கொஞ்ச நேரம் ஒத்துழைப்பு தந்தார். மேத்யூஸ் 113 (128) ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. டி சில்வா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா மிகவும் நேர்த்தியா பந்துவீசி 10 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். அதில் இரண்டு மெய்டன் ஓவர்கள் அடங்கும். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். புவனேஸ்வர்குமார் அதிகப்படியாக 10 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்தார். இந்திய அணி 265 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.