இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி, கவுகாதியில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளது. இதில் முதல் டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் அபாராக பவுலிங் செய்து, தென் ஆப்பிரிக்கா அணியை 5 ஒவர்களுக்குள்ளேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வாய்ப்புக்கு வித்திட்டனர். மேலும் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் 4 ஓவர்களுக்கு 8 ரன்களே விட்டுக்கொடுத்திருந்தார் அஸ்வின்.
இதனால் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு கவுகாதியில் இரண்டாவது டி20 போட்டி துவங்குகிறது. காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளநிலையில், முதல் போட்டியில் இறங்கிய அணியே இரண்டாவது போட்டியிலும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று, டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும். சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக இருப்பதால் அணிக்கு கூடுதல் பலமாகவே இருக்கும். அதேவேளையில், முதல் போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா அணி, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்பு கூடுதலாகவே இருக்கும்.