ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியாவின் ஸ்கோர் 20 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி நிதானமாக விளையாட வழக்கம்போல் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. முதல் 10 ஓவரில் 53 ரன்கள் அடித்தது இந்தியா. சிறப்பாக விளையாடிய தவான் 53 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தியா 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவானைத் தொடர்ந்து விராட் கோலி 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
அரைசதம் அடித்த பின்னர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் ஸ்கோர் 31.1 ஓவரில் 178 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 83 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்ருடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி - தவான் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 27.1 ஓவரில் 158 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி அவுட்டானதும் ரகானே களம் இறங்கினார். தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 100-வது போட்டியில் களமிறங்கிய தவான் சதமடித்து அசத்தினார். ஒருநாள் போட்டியில் தவானின் 13-வது சதம் இதுவாகும்.
இந்தியா 34.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருக்கும்போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது தவான் 107 ரன்னுடனும், ரகானே 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் சிறிதுநேரத்திற்கு பின் போட்டி தொடங்கியது. தவான் மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய அணியின் சரிவு தொடங்கியது. ரன் விகிதமும் குறைந்தது.
தவானை தொடர்ந்து ரகானே 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சற்று நேரம் தாக்குபிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, பாண்டியா 9 ரன்னில் நடைய கட்டினார். தோனி மட்டுமே இறுதி நின்று ஆட்டமிழக்காமல் 42(43) ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா, நிகிடி தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.
விராட் கோலி, ஷிகர் தவான் ஆட்டத்தால் இந்திய அணி 330 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 289 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.