இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெறுகிறது. பிற்பகல் 1:30 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்த நிலையில், தர்மசாலாவில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை தொடர்ந்து போட்டி நடைபெறும் எனில் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் ஆகிவிட்டதால் 20 ஓவர்கள் வரை இரு அணிகளுக்கும் குறைக்கப்படலாம்.
கொரோனா தொற்று காரணமாக மைதானத்தில் ரசிகர்களின் வருகை குறைவாக காணப்படுகிறது. கடந்த தொடரில் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதே வேளையில், பலமான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உற்சாகத்தில் தென்னாப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவே ஆகும். சமீபத்திய நியூசிலாந்து சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருபது ஓவர் தொடரில் வரலாற்று வெற்றி பெற்றிருந்த போதிலும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி முழுமையாக தோல்வி அடைந்தது.