தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 134 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் அதிரடியாக விளையாட, ரோகித் ஷர்மா 9 (8) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலியும் 9 (15) ரன்களில் வெளியேற, 36 (25) ரன்களில் தவானும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ரிஷாப் 19 (20) ரன்களில் அவுட் ஆக, ஸ்ரேயாஸ் ஐயர் 5 (8) ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்தவர்களில் ஹர்திக் பாண்ட்யா 14 (18) மற்றும் ரவீந்திர ஜடேஜா 19 (17) ரன்கள் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.