இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை?

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை?
இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை?
Published on

ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. போட்டி நடக்கும் மான்செஸ்டரில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் ’மழையே மழையே போ போ’ என வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி, மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் இந்தப் போட்டியை காண மான்செஸ்டர் வந்துள்ளனர். 

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளை வென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் இன்றைய போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. 

தவான் காயமடைந்திருப்பதால் அவருக்குப் பதிலாக, தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுல் களமிறங்குவார். மிடில் வரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பேட்டிங்கில் விராத் கோலி,  ரோகித் சர்மா, ராகுல் ஆகியோரைத் தான் அணி இப்போது அதிகம் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை எட்டலாம்.

வேகப்பந்து வீச்சில் பும்ரா, புவனேஷ்வர் குமார் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி இன்று சேர்க்கப்படலாம்.

உலக கோப்பையில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. அதைத் தக்க வைக்கும் நோக்கில் இந்திய வீரர்கள் இன்று ஆக்ரோஷம் காட்டுவார்கள் என்று நம்பலாம்.

பாகிஸ்தான் அணியை, கணிக்க முடியாத அணி என்பார்கள். அப்படித்தான் அதன் செயல்பாடு இருக்கிறது. அந்த அணியில், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான், பாபர் அசாம், ஹபீஸ், கேப்டன் சர்பிராஸ் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் முகமது ஆமிர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷகீன் அப்ரிதி மிரட்டுகிறார்கள். இதனால் இன்றைய போட்டி பரபரப்பாகவே இருக்கும். 

இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய போட்டி நடக்கும் மான்செஸ்டரிலும் மழை பெய்து வருகிறது. இன்றும் பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com