உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டன் விராட் கோலி 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா - ஷிகார் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.
பின்னர், ரோகித் சர்மா உடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் இரண்டாவது சதம் இது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்துவீச்சில் வாஹப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் விளாசினார். ரோகித் ஆட்டமிழந்ததை அடுத்து விராட் கோலியுடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாட தொடங்கிய பாண்ட்யா ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அமீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 56 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 222 இன்னிங்ஸில் இந்த ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்பு 276 இன்னிங்ஸில் சச்சின் 11 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள்:
விராட் கோலி - 222
சச்சின் - 276
ரிக்கி பாண்டிங் - 286
கங்குலி - 288
காலிஸ் - 293