உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ -முகமது அமைப்பு ஈடுட்டது. இதையடுத்து அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது எனவும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கமான கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவின் (சிசிஐ) அலுவலகம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இருக்கிறது. இங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கானை கவுரவிக்கும் வகையில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதே போல் சக வீரர்களுடன் இம்ரான்கான் இருக்கும் குரூப் போட்டோவும் தொங்கவிடப்பட்டு இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளப் நிர்வாகிகளின் முடிவின்படி இவ்விரு புகைப்படங்களும் அகற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து சிசிஐ-ன் செயலாளர் சுரேஷ் பாப்னா கூறும்போது, “பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது. புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் சொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போட்டி அட்டவணையை மாற்றம் செய்வது குறித்து இதுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை அணுகவில்லை என பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் பாகிஸ்தான் உடனான போட்டியை இந்திய அணி புறக்கணித்தால், புள்ளிகளை இழக்க நேரிடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நாம் விளையாடாவிட்டால் கோப்பையை அவர்கள் வென்று விடுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.