நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
அதிரடியாக ஆட்டத்தை துவக்கிய பிரித்வி ஷா 18 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் எடுத்த நிலையில், சவுத்தி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நாயகன், 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இந்த விக்கெட்டை நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் ஜேமிசன் சாய்த்தார். புஜாரா விக்கெட் வீழ்ந்த அதிர்ச்சி மறைந்த சிறிது நேரத்தில் இந்திய ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த விக்கெட்டையும் ஜேமிசன் எடுத்தார்.
40 ரன்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், மயங்க் அகர்வால் - ரகானே ஜோடி சற்று நேரம் நிதானமாக விளையாடி நம்பிக்கை அளித்தது. ஆனால், மயங்க் அகர்வால் 34 ரன்கள் எடுத்திருந்தபோது, டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய விஹாரியும் 7 ரன்னில் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அவரது விக்கெட்டையும் ஜேமிசன் வீழ்த்தினார்.
101 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. அதனால், இந்திய அணி எளிதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் நிலை ஏற்பட்டது. ஆனால், போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் 55 ஓவர்களுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி சார்பில் ரகானே 38(122), ரிஷப் பண்ட் 10(37) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகமான நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார்.
ஏற்கெனவே ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியிடம் இந்தியா முழுமையாக இழந்துள்ள நிலையில், டெஸ்ட் போட்டியையும் தடுமாற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், ரகானேவும், ரிஷப் பண்ட்டும் களத்தில் இருப்பதால் அவர்கள் அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
India vs New Zealand 1st Test Match at Wellington live result
#IndvsNz