தோனி நீங்க 'சான்ஸே இல்ல' !

தோனி நீங்க 'சான்ஸே இல்ல' !
தோனி நீங்க 'சான்ஸே இல்ல' !
Published on

இதுவரை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அணியின் தொடக்க வீரராகவோ அல்லது நடுவரிசை ஆட்டக்காரர்களாகவோ இருந்திருப்பார்கள். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் அடித்து முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர் (18,426). சச்சின் தன்னுடைய  பெரும்பாலான ரன்களை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியே குவித்தார்.

ஆனால், தோனி இப்போது 10 ஆயிரம் ரன்களை அடித்திருப்பதை அசாதாரண சாதனையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆம், அணியில் 6 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி 10 ஆயிரம் ரன்கள் எடுத்திருப்பது இமாலய சாதனையாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனையை கிரிக்கெட்டின் மெக்காவாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி நேற்று நிறைவேற்றினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்கார் தோனி. இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் இந்தச் சாதனையை புரிந்துள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை தோனி 319 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 சதம், 67 அரைசதத்துடன், 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோனி 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோனி 33 ரன்கள் எடுத்தபோது, 10 ஆயிரம் ரன்களை கடந்தார். மேலும் உலகளவில் விக்கெட் கீப்பர்களில் இலங்கையின் குமார சங்கக்காராவுக்கு அடுத்து தோனி மட்டுமே இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.

அதேபோல ஒரு 6 ஆவது பேட்ஸ்மேனாக பல நேரங்களில் களமிறங்கி இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடி இந்த 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார் தோனி. இதன் காரணமாகவே மற்ற பேட்ஸ்மேன்களின் 10 ஆயிரம் ரன்களை விட தோனியின் இந்தச் சாதனை பெரிதாக கொண்டாடப்படுகிறது.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள விரேந்திர சேவாக் "வாழ்த்துகள் தோனி 10 ஆயிரம் ரன்களை கடந்ததற்கு. 51.5 சதவித சராசரியை வைத்துக்கொண்டு இதனை செய்தது பாராட்டுக்குறியது" என பதிவிட்டுள்ளார். இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார சங்கக்காரா தனது ட்விட்டர் பதிவில் "வாழ்த்துகள் தோனி. பேட்டிங் வரிசை, ஸ்டிரைக் ரேட், சராசரி இதையெல்லாம் சேர்த்து வைத்து பார்க்கும்போது, இது ஒரு மகத்தான சாதனை" என தெரிவித்துள்ளார். இவர்களை தவிர சச்சின், கங்குலி, அபிதாப் பச்சன் என பலரும் தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com