ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இன்று பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. அனுபவ வலிமையுடன் இந்திய அணியும், முதல்முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்துடன் பங்களாதேஷ் அணியும் களம் காண்கின்றன.
ஆசியக் கோப்பை நடப்புத் தொடரில் எந்த ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணி ஒருபுறம். கடும் போராட்டம் நடத்தி இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்த பங்களாதேஷ் அணி மறுபுறம். கோப்பைக்காக துபாயில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கேப்டன் ரோகித் ஷர்மா -ஷீகர் தவான் ஆகியோரின் சிறப்பான தொடக்கம் இந்திய அணிக்கு வலுசேர்க்கிறது. தவான் 4 போட்டிகளில் 327 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் ஷர்மா 4 போட்டிகளில் 269 ரன்கள் குவித்திருக்கிறார். அதேவேளையில் மத்திய வரிசை வீரர்கள் ரன்குவிக்க சற்று போராடி வருகிறார். பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சேஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர் தமீம் இக்பால், ஷகீப் அல் ஹசன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேவேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்ஃபிகுர் ரஹீம் பெரும் பலமாக இருக்கிறார். 4 போட்டிகளில் 297 ரன்களை அவர் குவித்திருக்கிறார். மத்திய வரிசை வீரர்களான முஹமது மிதுன், மெஹ்முதுல்லா ஆகியோரும் நடப்புத் தொடரில் குறிப்பிடத்தக்க அளவில் ரன்குவித்துள்ளனர். மஷ்ரப் மொர்டாசா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை அந்த அணி நம்பியுள்ளது. பங்களாதேஷ் ஆச்சர்ய வெற்றியை நிகழ்த்தக் கூடிய அணி என்பதால் இறுதிப்போட்டி இந்திய அணிக்கு சற்று சவாலாகவே இருக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.