பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலிரவாக நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. 30.3 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 14 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ரோகித் ஷர்மா 21 (35) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் கேப்டன் கோலி அணி ஸ்கோரை உயர்த்தினர்.
அரைசதம் அடித்த புஜாரா 55 (105) ரன்களில் அவுட் ஆனார். பின்னர் ரஹானே உடன் ஜோடி சேர்ந்த கோலி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் போட்டார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 46 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 59 (93) மற்றும் ரஹானே 23 (22) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி பங்களாதேஷை விட 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.