இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா-பங்களாதேஷ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்து வந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸில், அந்த அணியின் கேப்டன் மொமினுல் ஹக் விக்கெட்டை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் எடுத்தார். இது சொந்த மண்ணில் அஸ்வின் எடுக்கும் 250ஆவது விக்கெட் ஆகும். இதன்மூலம் சொந்த மண்ணில் 250 விக்கெட்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளார் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் இந்தியாவில் 250 விக்கெட்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்திய மண்ணில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்களையும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்களையும் எடுத்துள்ளனர்.
அதேபோல உலகவில் சொந்த மண்ணில் அதிவேகமாக 250 விக்கெட்களை எட்டிய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். உலகளவில் இலங்கை சேர்ந்த முத்தையா முரளிதரன் தனது சொந்த மண்ணில் 40 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்களை எடுத்தார். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவின் அனில் கும்ப்ளே உள்ளார். அனில் கும்ப்ளே இந்தியாவில் 41 போட்டிகளில் 250 விக்கெட்கள சாய்த்தார். அந்தவகையில் தற்போது அஸ்வின் 42 டெஸ்ட் போட்டிகளில் 250ஆவது விக்கெட்டை வீழ்த்தி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.