இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முந்தைய போட்டியை போலவே பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடக்கம் முதலே திணறினர். விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தனர். 10 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.
தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆஸ்திரேலியா அணி கடைசி ஒரு ஓவரை பேட்டிங் செய்யமுடியவில்லை. இதனையடுத்து இந்திய அணிக்கு 19 ஓவரில் 137 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், அஹமது தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் வாரி வழங்கினர். குல்தீப் 4 ஓவரில் 23 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
இதனையடுத்து, தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதனையடுத்து, மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 25 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும், இந்திய அணி வென்றால் தொடர் சமன் ஆகும்.