இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பனிப்பொழிவு குறித்து சரியாக கணிக்கவில்லை என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 143 ரன்கள் குவித்தார்.
அதன் பிறகு 359 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஹண்ட்ஸ்கோம்ப் மற்றும் டர்னர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து ஆபார வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, “விக்கெட்டுகள் சரியாக விழுந்தன. ஆனால் பனிப்பொழிவு பற்றி இரண்டாவது முறையாக நாம் தவறான முடிவெடுத்துவிட்டோம். பனிப்பொழிவில் பந்துவீசுவது மிகக் கடினமானது. அது பந்துவீச்சை மோசமாக்கியது. நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட முயன்றனர். ஆனால் ஆஷ்டான் டர்னர் அதனை முறியடித்துவிட்டார். ஹண்ட்ஸ்கோம்ப் மற்றும் காவஜாவும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். டர்னர் பேட்டிங் ஆட்டத்தையே மாற்றிவிட்டது” எனக் கூறினார்.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “நாங்கள் பனிப்பொழிவு குறித்து இரண்டாவது முறையாக தவறாக முடிவு எடுத்துள்ளோம். ஏனென்றால் கடந்தப் போட்டியில் இந்திய அணி பனிப்பொழிவு வரும் என எதிர்பார்த்து இரண்டாவது பேட்டிங் செய்தோம். ஆனால் அங்கு பனிப்பொழிவு ஏற்படவில்லை. அதேபோல மொஹாலியில் நேற்று நடந்தப் போட்டியில் பனிப்பொழிவு ஏற்படாது என நினைத்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தோம். போட்டியில் தோற்றதற்கு இது ஒரு முக்கியமான காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஷிகர் தவான் அவருடைய ஃபார்ம் குறித்து, “நான் நாளிதழ்கள் மற்றும் பத்திரகைகள் படிக்கமாட்டேன். அதனால் என் மனம் அமைதியாக இருக்கும். அப்போதுதான் என்னால் சிறப்பாக விளையாட முடியும். அத்துடன் தவறான சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை எப்போதும் என் மனதில் வரவிடுவதில்லை. இதனால்தான் சிறப்பாக விளையாட முடிகிறது. ரிஷ்ப் பந்த் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டெம்பிங்கை தவறவிட்டது சற்று வருத்தம்தான். ஆனால் அவர் தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர். அதனால் அவரை தோனியுடன் ஒப்பிடுவது தவறு” எனக் கூறியுள்ளார்.