இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா வங்கதேச தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானநிலையில், தற்போது பிசிசிஐ அறிவித்த ஒருநாள் போட்டிகளில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு, குணமாகி வந்த புகைப்படத்தையும் ஜடேஜா பதிவிட்டிருந்தார். காயம் முழுமையாக குணமாகாததால், அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்தும் ஜடேஜா விலகியநிலையில், இந்தத் தொடருக்குப் பின்னர் இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரிலும் ஜடேஜா இடம்பெறவில்லை.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தநிலையில், தற்போது காயம் குணமடைய இன்னும் சிலகாலம் தேவையென ஜடேஜா தரப்பிலிருந்து, பிசிசிஐ-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஒருநாள் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா பங்கேற்பாரா அல்லது அவருக்குப் பதிலாக சௌரப் குமார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை இன்னும் பிசிசிஐ உறுதி செய்யவில்லை. இந்நிலையில், குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் ஜடேஜாவின் மனைவி ரீவாபா ஜடேஜா பாஜக சார்பாக ஜாம்நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தனது மனைவி ரீவாபா ஜடேஜாவுக்காக வாக்கு சேகரிப்பில் ஜடேஜா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனது மனைவிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச தொடரில் காயத்தை காரணம் காட்டி பங்கேற்க முடியாது என ஜடேஜா கூறியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ஜடேஜா விளக்கினால் மட்டுமே உண்மை தெரியவரும்.