இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இலங்கையை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றுள்ள இந்திய அணி, இன்றையப் போட்டியில் ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. கடந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே சென்ற இலங்கை அணி, இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்று தன்னுடைய கவுரவத்தை தக்கவைத்துக்கொள்ள போராட இருக்கிறது.
இலங்கையை பொறுத்தவரை அவிஷ்கா பெர்ணான்டோ, அசலங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர். அந்த அணியின் நட்சத்திர வீரர் தனஞ்சயா டிசில்வா இன்னும் தன்னுடைய முழு திறனை வெளிப்படுத்தவில்லை.
பந்துவீச்சை பொறுத்தவரை ஹசரங்காவின் சுழல் மட்டுமே கடந்தப் போட்டியில் எடுபட்டது. இந்தப் போட்டியில் பந்துவீச்சில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றி வசமாகும்.
இந்தியாவை பொறுத்தவரை ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதால், சில வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா மட்டும் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பார்முக்கு வர வேண்டும். எனினும் இந்திய அணி இந்தப் போட்டியிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடரும் என எதிர்பார்க்கலாம்.