பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட்டில் காபா மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்தியா வெற்றிப்பெற 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவருக்கு அடுத்து ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 328 என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் களமிறங்கினார்கள். ரோகித் சர்மா 4 ரன்களுடனும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் தடைப்பட்டு 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நாளை கடைசி நாள் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில் மேலும் 324 ரன்களை எடுத்தால் இந்தியா வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றும். டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாள் ஆட்டம் எப்போதும் கடினமானதாகவே இருக்கும். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் நாளை எப்படி விளையாடப்போகிறார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.