உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
ஏற்கெனவே உலகக் கோப்பையை இந்திய அணி இதுவரை இரண்டு முறை வென்றுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மற்றும் அதன் வீரர்கள் செய்த முக்கியமான சாதனைகள் சிலவற்றை திரும்பி பார்ப்போம்.
1983 உலகக் கோப்பை:
1983ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பையில் இருமுறை சாம்பியன் ஆன பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டிஸ் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. அந்த உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 175 ரன்கள் குவித்தார். இது உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் ஒருவர் அடித்த அதிகபட்சமான ஸ்கோராக இருந்தது. அத்துடன் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
1987 உலகக் கோப்பை:
இந்த உலகக் கோப்பையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் சேத்தன் சர்மா நியூசிலாந்தின் ரூதர்போர்டு, இயன் ஸ்மித் மற்றும் இவின் சாட்ஃபீல்ட் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி முதல் முறையாக ஹட்ரிக் சாதனையை படைத்தார். இதுவே உலகக் கோப்பையின் முதல் ஹட்ரிக்காக அமைந்தது.
1996 உலகக் கோப்பை:
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. எனினும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அந்த தொடரில் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 7 போட்டிகளில் 87.71 சராசரியுடன் 523 ரன்கள் குவித்து இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
1999 உலகக் கோப்பை:
இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் திராவிட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் இவர்கள் இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். 2ஆவது விக்கெட்டிற்கு கங்குலி மற்றும் திராவிட் 318 ரன்கள் சேர்த்தனர். அத்துடன் இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. இது உலகக் கோப்பையில் அதிகபட்சமாக ஒரு ஜோடி குவித்த ரன்களாக பல ஆண்டுகள் இருந்தது. கங்குலி மற்றும் திராவிட்டிற்கு இது முதல் உலகக் கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 உலகக் கோப்பை:
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சவுரவ் கங்குலி தலைமையில் களமிறங்கியது. இந்த உலகக் கோப்பையில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் படு தோல்வி அடைந்தது. எனினும் அதன்பிறகு 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்திய தவறவிட்டது. இந்தத் தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் 673 ரன்கள் சேர்த்தார். இதுவே இன்று வரை ஒரே உலகக் கோப்பையில் ஒருவர் அடித்த அதிகபட்சமான ரன்களாக உள்ளது.
2011 உலகக் கோப்பை:
2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இதனால் 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ரசிகர்கள் எண்ணம் நிறைவேறும் வகையில் தோனி தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தத் தொடரிலும் இந்திய அணியின் சச்சின் 62.50 சராசரியுடன் 482 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்தார். இவருடன் சேர்த்து இந்திய அணியின் யுவராஜ் சிங் 8 ஆட்டத்தில் 362 ரன்கள் குவித்ததுடன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2015 உலகக் கோப்பை:
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 போட்டியில் வெற்றிப் பெற்று அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தொடரில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷிகார் தவான் 8 போட்டிகளில் 412 ரன்கள் குவித்தார்.
இந்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணியில் இந்திய அணியும் ஒன்று என்பதால் இந்திய அணியின் ரசிகர்கள் இந்திய அணியின் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.