நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் சில குறைபாடுகள் இன்னும் களையப்படவேண்டி உள்ளது. அவை குறித்து பார்ப்போம்.
1. கடைசி பத்து ஓவர்களில் இந்தியாவின் பேட்டிங்:
நடப்பு உலகக் கோப்பை தொடரில் கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்து 4 விக்கெட் பறிக்கொடுத்தது. அதேபோல இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் பறிகொடுத்தாலும் 72 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதேபோல நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்களை இழந்தது. இந்தப் போட்டிகளில் வீரர்களின் இந்தச் செயல்பாடுகளால் அணியின் ஸ்கோரில் 20 ரன்களிலிருந்து 30 ரன்கள் குறைந்தது. இந்த முக்கிய பிரச்னையை இந்திய அணி சரிசெய்யவேண்டும்.
2. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு:
அதேபோல இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சற்று தடுமாறி வருகின்றனர். உதாரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய 34 ஓவர்களில் இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய 14 ஓவர்களில் இந்திய அணி 73 ரன்கள் எடுத்தது. பொதுவாக சுழற்பந்து வீச்சிற்கு எதிராக நன்றாக விளையாடும் இந்திய அணி நடப்பு தொடரில் சற்று சொதப்பி வருகிறது.
3. நடுகள ஆட்டக்காரர்களின் சிக்கல்:
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா முக்கியமாக சந்தித்து வரும் சிக்கல் நான்காவது இடத்தில் ஆடும் பேட்ஸ்மேனின் ஆட்டமே ஆகும். இந்த இடத்திற்கு முதலில் கே.எல்.ராகுல் பயன்படுத்தப்பட்டார். அவர் நான்காவது இடத்தில் விளையாடி 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன்பிறகு இந்த இடத்திற்கு விஜய் சங்கர் விளையாடினார். இவர் 29,14 ஆகிய ரன்களை அடித்தார். இவரைத் தொடர்ந்து நான்கவது இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்கினார். அவரும் இரு போட்டிகளில் 32, 48 ஆகிய ரன்களை சேர்த்தார். எனவே நான்காவது இடத்திற்கு இந்திய அணி சரியான வீரரை இன்னும் தேர்வு செய்யவில்லை.
அதேபோல இவர்களை தொடர்ந்து வரும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தின் முறையே ஹர்திக் பாண்ட்யா மற்றும் தோனி ஆகியோர் விளையாடி வருகின்றனர். அவர்களும் நடப்பு தொடரில் சரியாக சோபிக்க தவறியுள்ளனர். எனவே இந்தியாவின் நடுகள வீரர்களின் செயல்பாடுகள் அணிக்கு மிகவும் கவலை நிலையை அளித்து வருகிறது.
4. நான்காவது இடத்தில் தோனி:
இத்தனை வீரர்களை நான்காவது இடத்தில் இறக்கிய இந்திய அணி, அனுபவ வீரர் தோனியை ஏன் நான்காவது இடத்தில் களமிறக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் நான்காவது இடத்தில் தோனி இதுவரை 30 போட்டிகளில் விளையாடி 1358 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் நான்காவது இடத்தில் தோனி சராசரி 56.68ஆக உள்ளது. மேலும் தோனியின் தற்போதைய தடுப்பு ஆட்டம் மற்றும் சிங்கிள் எடுக்கும் தன்மை நான்காவது இடத்திற்கு சற்று பொருத்தமாகவே உள்ளது. அதேபோல நான்காவது இடத்தில் தோனி விளையாடும் போது அவரின் ஸ்டிரைக் ரேட் 92 ஆக உள்ளது. இதற்குமாறாக 6ஆவது இடத்தில் களமிறங்கும் போது தோனியின் சராசரி 46ஆக குறைந்துள்ளது. அத்துடன் அவரின் ஸ்டிரைக் ரேட் 85ஆக குறைந்துள்ளது.
இதே கருத்தை இந்திய அணியின் வீரர் ரோகித் ஷர்மா, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். எனவே இந்திய அணி அனுபவ வீரர் தோனியை நான்காவது இடத்தில் விளையாட வாய்ப்பளித்தால் அது சரியாக இருக்கும் என்று நமக்கு கிடைத்துள்ள தரவுகள் கூறுகின்றன. ஆகவே இனிவரும் போட்டிகளில் இந்திய அணி நான்காவது இடத்தில் தோனியை இறக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிர்கள் உள்ளனர்.