நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சுப்மன் கில்லிற்கு பதிலாக பிருத்வி ஷா களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து லக்னோவில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. 2வது போட்டியில் 100 ரன் என்கிற மிகக்குறைவான இலக்கை இந்திய அணி கடும் போராட்டத்துக்கு பின்னரே எட்டியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் பின் வரிசை வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் ஆட்டத்தில் பெரிய பின்னடைவை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணியில் சுப்மன் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி ஆகிய மூவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். குறிப்பாக இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் அண்மையில்தான் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து கவனம் ஈர்த்தார்கள். ஆனால் டி20 போட்டிகளில் இருவரின் பேட்டிங் கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த நிலையில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ள பிருத்வி ஷாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி இன்றைய போட்டியில் சுப்மன் கில்லிற்கு பதிலாக பிரித்வி ஷாவை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள பிரித்வி ஷா, அதிரடி ஃபார்முடன் இருக்கிறார். அவரை டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
3வது போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்: ப்ரித்வி ஷா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், சிவம் மாவி, யுஸ்வேந்திர சாஹல்