சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் ரசிகர்கள் தங்கள் டிவி பெட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்திய அணியின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் டிவிகளை நடுரோட்டில் போட்டு உடைத்து, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவையில்லாத பதற்றத்தைத் தடுக்க, அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள தோனி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கிளாக்டவர் ரவுண்டானா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அம்மாநில அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளது. இதேபோல் கர்நாடக மாநிலம் குல்பர்க்காவிலும் ரசிகர்கள் தொலைக்காட்சித் திரைகளை அடித்து நொறுக்கித் தங்கள் வெறுப்பைக் காட்டினர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற்றபோதே இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
31 ஓவர்கள் கூட களத்தில் நிற்க முடியாமல் இந்திய அணி சுருண்டது, வீடுகளிலும் பொது இடங்களிலும் தொலைக்காட்சியில் விளையாட்டைக் கண்ட ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கிரிக்கெட் வீரர்களின் படங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர்.