முன்பெப்போதும் இல்லாத வகையில் இந்திய வீரர் வீராங்கனைகள் இம்முறை பாராலிம்பிக்ஸில் 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். டி63 பிரிவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார், 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில், அமெரிக்காவின் பிரெக் எஸ்ரா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
எஃப்46 பிரிவு ஈட்டி எறிதலில், இந்திய வீரர்கள் அஜீத் சிங் மற்றும் சுந்தர் சிங் குர்ஜார் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். கியூபாவின் கைலெர்மோ கோன்சாலஸ், 66.16 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசியெறிந்து தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.
முன்னதாக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். அதே நேரத்தில், கடந்த வாரம் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற அவானி, 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் ஐந்தாம் இடத்தையே பிடித்திருந்தார். பதக்கப்பட்டியலில் இந்தியா, மூன்று தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றுடன் 17ஆவது இடத்தில் உள்ளது.