பாரீஸ் பாராலிம்பிக் தொடரில், இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
பாரீஸ் பாராலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கப்பதக்கம் வென்றார். இதில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். முதலிடம் பிடித்த அவனி லேகரா, 249.7 புள்ளிகளைப் பெற்று, கடந்த பாராலிம்பிக் சாதனையை முறியடித்தார்.
கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரிலும் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் அவனி லேகரா தங்கப் பதக்கம் வென்ற நிலையில், தொடர்ந்து 2ஆவது முறையாக தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இதேபோல், மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக் தடகளப் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
இதற்கிடையே, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் நர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.