உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. இந்திய அணிக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. இந்திய அணிக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. இந்திய அணிக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
Published on

முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திலேயே உள்ளது. இன்னும் எத்தனை போட்டிகளில் ஜெயித்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளைப் பொருத்தே, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இந்தப் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளே இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். இறுதிப்போட்டி, இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

அதற்கடுத்த இடங்களில் இலங்கையும், தென்னாப்பிரிக்காவும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா முதல் இரண்டு இடங்களுக்குள் வர வேண்டுமெனில், தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், இந்திய அணி குறைந்தது 3 போட்டிகளிலாவது வெற்றிபெற வேண்டும். அதாவது, 3-0 அல்லது 3-1 என வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை, இதன்படி அமையாவிட்டால், இலங்கை (Vs நியூசிலாந்து) மற்றும் தென்னாப்பிரிக்கா (Vs வெஸ்ட் இண்டீஸ்) போட்டித் தொடர்களின் வெற்றி, தோல்வியைப் பொருத்து மாறும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி கடந்த 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது. இதில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இந்திய அணியின் புள்ளி சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 58.93 சதவிகிதத்துடன் இந்திய அணி 2ம் இடத்திலும் இருந்தன. அதனால், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

அந்தவகையில், முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதன்மூலம், 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிப்பதுடன், இந்திய அணியின் வெற்றி விகிதமும் 58.93லிருந்து 61.67 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணி வெற்றிபெற்றாலும் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் தான் உள்ளது. ஆனால், வெற்றி விகிதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றதால், அதன் வெற்றி விகிதம் குறைந்துள்ளது.

தொடருக்கு முன்பு 75.56 ஆக இருந்த ஆஸ்திரேலியாவின் புள்ளி விகிதம் தற்போது 70.83 ஆகக் குறைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வெற்றி விகிதம் அதிகமாகவே இருந்தாலும், அடுத்துவரும் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றால், நிச்சயம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். தற்போது இலங்கை அணி 53.33 சதவிகிதத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com