சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் கிரிக்கெட் உலகின் பரம வைரிகளாகக் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதால், இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். இலங்கையுடனான தோல்விக்குப் பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, ஒவ்வொரு போட்டியையும் கவனமாகவே எதிர்கொண்டு வருகிறது. முதல் 2 போட்டிகளில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடும் லெவனைத் தேர்வு செய்த விராத் கோலி, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் தனது ஸ்டார் பவுலரான அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளித்தார். அஸ்வினுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் இந்திய அணியின் பக்கம் திரும்பிவிட்டதோ என்பதைப் போல அடுத்த 2 போட்டிகளிலும் பெரிய தடை இல்லாமல் வெற்றியை வசமாக்கியது.
அதேநேரம், இந்திய அணியுடனான தோல்விக்குப் பின்னர் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் எழுச்சிபெற்ற பாகிஸ்தான் அணி, கூடுதல் உத்வேகத்துடன் இந்திய அணியை எதிர்கொள்ளும். இந்திய அணியுடனான தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இருந்த இங்கிலாந்து ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வென்று ஆச்சர்யம் அளித்தது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் முக்கியமான பந்துவீச்சாளரான முகமது அமீர் இல்லாமல் களம்கண்ட பாகிஸ்தான், வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட எதிரணியை 211 ரன்களில் சுருட்டியது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதுவது இதுவே முதல் முறையாகும்.