இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது. தற்போது சமனில் உள்ளதால், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது.
2019 ஆண்டு நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது. இதனால் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் கோலி தலைமையிலான அணி உள்ளது. இந்தாண்டும் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும் இருக்கிறது.
இதற்கிடையே 2-ஆவது ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷிகா் தவனுக்கு இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட்டது. அதே போல் பீல்டிங் செய்த போது ரோஹித் சா்மா தோளில் காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அவா்களது உடல்நிலை தீவிரமாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதே போல் இளம் வீரா் ரிஷப் பன்ட் தலையில் ஏற்பட்ட காயத்தால் இன்றையப் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால்தான் அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே 2 ஆவது போட்டியில் களமிறக்கப்பட்டார். பன்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாகவே செய்தார் கே.எல்.ராகுல். முந்தையப் போட்டியில் வெற்றிப்பெற்றதால், இந்திய அணி அதே 11 பேருடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸி. அணியிலும் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படாது என கூறப்படுகிறது.