ரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 224 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் விராத் கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இடது கை சுழற்பந்து வீச்சாளர் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 12 ரன்களில் பெவிலியின் திரும்பினார். தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டையும், நார்ட்ஜே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.
பின்னர் ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் நின்று நிதானமாகவும் சரியான பந்துகளை விளாசியும் சரிந்த அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, பீடிட் பந்தை சிக்சருக்குத் தூக்கி, அபார சதமடித்தார். இது அவருக்கு 6 வது டெஸ்ட் சதம். இந்த தொடரில் அவர் அடித்துள்ள 3 வது சதம் இதுவாகும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரஹானே அரைசதம் கடந்து அசத்தினார். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் ரோகித் 117 ரன்களுடனும் ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் தற்போது நான்காவது விக்கெட்டிற்கு 185 ரன்கள் சேர்த்துள்ளனர். நாளைய ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஹானே சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.