உமேஷ், அஸ்வின் பந்துவீச்சில் சிக்கி 197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்!

உமேஷ், அஸ்வின் பந்துவீச்சில் சிக்கி 197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்!
உமேஷ், அஸ்வின் பந்துவீச்சில் சிக்கி 197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்!
Published on

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி. இதில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதால், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ள நிலையில், நேற்று இந்தூரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, பௌலிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குன்மேன் சுழலில் சிக்கி முதல் நாளிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிகப்பட்சமாக இந்திய அணி சார்பில் விராட் கோலி 22 ரன்களும், கே. எல். ராகுலுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட சுப்மன் கில் 21 ரன்களும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மேத்யூ குன்மேன் 5 விக்கெட்டுகளும், லயன் 3 விக்கெட்டுகளும், டாட் முர்ஃபி ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார். இதையடுத்து, முதல் நாளிலேயே களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிகப்பட்சமாக உஸ்மான் கவாஜா 60 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கிய நிலையில், உமேஷ் யாதவின் வேகத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், உமேஷ் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை மதிய உணவு இடைவெளைக்கு முன்னதாகவே துவங்கி ஆடி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com