உலகக் கோப்பை மோதல் - இந்தியாவிற்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான் ?

உலகக் கோப்பை மோதல் - இந்தியாவிற்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான் ?
உலகக் கோப்பை மோதல் - இந்தியாவிற்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான் ?
Published on

உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய பத்து அணிகள் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தியா விளையாடும் முதல் போட்டி ஜூன் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெறுகிறது.

ஆனால் இந்த தொடரில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் போட்டியாக ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியே கருதப்படுகிறது. ஏனென்றால் அன்றைய தினம் மோதும் அணிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான். இந்த இரண்டு அணிகளுக்கும் எல்லையில் மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் தொடர் பகை இருந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள வரலாறுகளின் படி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்தியாவை உலகக் கோப்பையில் வென்றுவிட வேண்டும் என ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் தீவிர வேகத்துடன் விளையாடும். ஆனால் யாரிடம் தோற்றாலும் பரவாயில்லை, பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என இந்தியா வெற்றி பெற்றுவிடும். இது தொடர்கதையாக உள்ளது. 

இந்நிலையில் தான் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே இந்திய எல்லைப்பகுதியான புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால், இந்த உலகக் கோப்பையில் இந்திய விளையாடக் கூடாது என இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் குரல் எழுப்பினர். அதுதொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உலகக் கோப்பையில் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் விளையாடுவது பெருமளவு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், புல்வாமா தாக்குதலால் இருதரப்பு மோதல் ஏற்பட்டதால், இந்த உலகக் கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் தீவிர மோதலில் ஈடுபடுவார்கள். எனவே ரசிகர்களும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இத்தகைய சூழல் இருக்கும் நிலையில் உலகக் கோப்பைக்கான அணிகளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் அறிவித்துள்ளன. இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணைக் கேப்டன்) ஷிகர் தவான், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்தி, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமத் ஷமி ஆகிய 15 பேர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் அணியில், சர்பராஸ் அகமது (கீப்பர், கேப்டன்), அபித் அலி, பாபர் அசாம், பஹிம் அஷ்ரப், பகார் ஜமான், ஹரிஸ் சோஹேல், ஹசன் அலி, இமத் வாசிம், இமம்-உல்-ஹாக், ஜூனத் கான், முகமது ஹஃபீஸ், ஷபாத் கான், ஷஹீன் ஷா அப்ஃரிதி, சோயிப் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் பலத்தை ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள். இந்த பலத்திற்கு பாகிஸ்தான் அணி ஈடுகொடுக்குமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பையில் மோதிக்கொண்ட அந்த தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில், இரண்டிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றது. அதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் தெரோபி தொடரில் ஒரு போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியிலும் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. அதற்கு முன்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடியது 2015 உலகக் கோப்பையில் தான். அந்தப் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருப்பவர்களில் ஃபகார் ஜமான், பாபர் அசாம், இமாம் உல்-ஹக், சர்ஃபராஸ் அகமத் ஆகியோர் பேட்டிங்கில் முன்னிலை வகிக்கின்றனர். சோயப் மாலிக் அனுபவ வீரராக செயல்படுவார். ஆல்ரவுண்டர்களில் மொஹம்மத் ஹஃபீஸ், இமாத் வாசிம் ஆகியோ முன்னிலையாக செயல்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் ஹசன் அலி, ஜுனைத் கான் ஆகியோரைத் தவிர மற்றவர்களின் பந்துவீச்சு எளிமையாக இருக்கலாம் எனப்படுகிறது. புதிய பேட்ஸ்மேனாக அமித் அலி இருப்பதால், அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இந்த அணி முக்கிய வீரர்களாக கருதப்படும் பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு கடினப்பட்டதும், பவுலர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் எளிதாக அடித்ததையும் ஆசிய கோப்பையில் பார்த்தோம்.

எனவே ஆசிய மைதானங்களிலேயே இந்தியாவிடம் தோல்வியை தழுவிய இந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுவது கடினம் தான். மேலும், தற்போதைய நிலவரத்தை தெரிந்துகொள்ள வரும் மே 5ஆம் தேதி பாகிஸ்தான் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செல்கிறது. அது முடிந்த பின்னர் பாகிஸ்தான் நிலை முழுமையாக தெரிந்துவிடும். அதேசமயம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்றியே கடும் சவாலாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com