வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.
இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.
இந்திய ஏ டெஸ்ட் அணிக்கு, ஹனுமா விஹாரி கேப்டனாக செயல்படுகிறார். முதல் போட்டி ஆண்டிகுவாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 228 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நதீம் 5 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சிராஜ், மார்கண்டே தலா 2 விக்கெட்டை சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, 312 ரன் எடுத்தது. அதிகப்பட்சமாக துபே 71 ரன்னும் விருத்திமான் சாஹா 66 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி, 188 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்த இன்னிங்ஸிலும் நதீம் 5 விக்கெட்டை வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டை சாய்த்தார்.
இதையடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்துள்ளது. அணி வெற்றி பெற இன்னும் 68 ரன் தேவை. 9 விக்கெட் கையில் உள்ள இந்திய ஏ அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.