வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இந்திய ஏ அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு ஏ அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில் 298 ரன் எடுத்தது. அதிகப்பட்சமாக, ரோஸ்டன் சேஸ் 84 ரன்னும் விக்கெட் கீப்பர் தாமஸ் 70 ரன்னும் தொடக்க ஆட்டக்காரர் அம்பரீஸ் 46 ரன்னும் எடுத்தனர்.
இந்திய ஏ அணி தரப்பில் கலீல் அகமது 4 விக்கெட்டையும், அவேஸ் கான் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணியால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி தோல்வியைத் தழுவியது.
இந்திய ஏ அணி தரப்பில், அதிகப்பட்சமாக அக்ஷர் பட்டேல், 63 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். குணால் பாண்ட்யா, வாஷிங் டன் சுந்தர் ஆகியோர் தலா 45 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ரோஸ்டர் சேஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.