அனுபவ வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு இடமில்லையா? - ஐசிசி அதிர்ச்சி

அனுபவ வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு இடமில்லையா? - ஐசிசி அதிர்ச்சி
அனுபவ வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு இடமில்லையா? - ஐசிசி அதிர்ச்சி
Published on

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு இடம் கிடைக்காதது குறித்து ஐசிசி கேள்வி எழுப்பியுள்ளது.

2019 உலகக் கோப்பை தொடருக்கான கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு இடம் கிடைக்காதது குறித்து ஐசிசி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில், அதிகமான பேட்டிங் சராசரியில் விராட் கோலி (59.57), தோனி (50.37), ரோகித் சர்மா (47.39) ஆகியோருக்கு அடுத்தபடியாக அம்பத்தி ராயுடு (47.05) நான்காவது இடத்தில் இருக்கிறார் என்ற தகவலை குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், “உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறவில்லை. அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது சரியென நினைக்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. 

அம்பத்தி ராயுடு 2013ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தம் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு 1694 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 10 அரைசதம், 3 சதம் அடித்துள்ளார்.

2013ம் வருடம் 4 போட்டிகளில் விளையாடி 101 ரன்கள் எடுத்தார். 2014ம் ஆண்டுதான் ராயுடுவின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான வருடம். அந்த வருடம் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 584 ரன்கள் எடுத்தார். 4 அரைசதம், ஒரு சதம் அடித்திருந்தார். பேட்டிங் சராசரியும் 44.92 ஆக இருந்தது. 2015இல் 7 போட்டிகளில் விளையாடி 267, 2016இல் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி 103 ரன்கள் எடுத்தார். 2017ம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018ம் ஆண்டு 11 போட்டிகளில் விளையாடி 392 ரன்கள் எடுத்தார். ஆனால், இந்த வருடம் அவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்து விட்டது. அவர் 10 போட்டிகளில் விளையாடி 247 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி வெறும் 30.88. 

அதேபோல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் ஆகிய வலிமையான அணிகளுக்கு எதிராக அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் சராசரி 39 ஆகும். விராட் 62, தோனி 45, ரோகித் சர்மா 44 ஆகியோர் அந்த வரிசையில் முன்னிலையில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர், 8 போட்டிகளில் 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அதேபோல், அம்பத்தி ராயுடு தேர்வு குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்பு தொடர்ச்சியாக ராயுடுவிற்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தோம். ஆனால், விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படுகிறார். அதனால், அவரை தேர்வு செய்தோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com