''முதல் போட்டி என்பதால் தொடக்கத்தில் பதட்டமாக இருந்தேன். இந்தியாவுக்காக விளையாடுவது எனது கனவு'' எனத் தெரிவித்துள்ளார் ரவி பிஷ்னோய்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் (21 வயது) அறிமுகமானார். அபாரமாக பந்துவீசிய அவர், ஒரே ஓவரில் ரோஸ்டான் சேஸ் மற்றும் ரோவ்மன் பவல் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அறிமுக டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'ரவி பிஷ்னோய் ஒரு திறமையுள்ள வீரர். அதன் காரணமாகவே அவருக்கு இந்திய அணியில் விரைவாக இடம் கிடைத்துள்ளது. அவரிடம் நல்ல திறமை இருக்கிறது. எனவே எந்த நேரத்திலும் அவரை எங்களால் பயன்படுத்த முடிகிறது. பிஷ்னோய்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது'' எனப் பாராட்டினார்.
இதுகுறித்து பிஷ்னோய் கூறுகையில், "இப்போது நன்றாக உணர்கிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது ஒரு கனவு, அது அருமையான தருணமாக இருந்தது. முதல் போட்டி என்பதால் தொடக்கத்தில் பதட்டமாக இருந்தேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வலுவான அணிகளில் ஒன்று என்பதை நாங்கள் அறிந்ததால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க விரும்பினேன். பனி இருக்கும் போது பந்தை பிடிப்பது சற்று சவாலானது. ஆனால் இதைப் பற்றி நான் ஒருபோதும் நினைக்கவில்லை'' என்று கூறினார்.
இதையும் படிக்க: ‘ரெய்னா புறக்கணிக்கப்பட காரணம் தோனியின் விசுவாசத்தை இழந்ததே’ - நியூசி. முன்னாள் வீரர்