IND Vs BAN டெஸ்ட் போட்டி| வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்!

வங்கதேச பிரபல ரசிகரான டைகர் ராபி மீது இந்திய ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியான சம்பவத்தை போலீசார் மறுத்துள்ளனர்.
டைகர் ராபி
டைகர் ராபிஎக்ஸ் தளம்
Published on

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (செப்.27) தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் முதல் நாள் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தப் போட்டியை காணவந்த வங்கதேச பிரபல ரசிகரான டைகர் ராபி மீது இந்திய ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியான சம்பவத்தை போலீசார் மறுத்துள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் கான்பூர் மைதானத்தில் சி ஸ்டாண்டில் அமர்ந்து டைகர் ராபி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சில இந்திய அணி ரசிகர்கள் அவரைப் பின்னால் இருந்து தாக்கியதாகவும், அதனால், அவர் அந்த இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆங்கிலம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டைகர் ராபி, “கூட்டத்தில் ஒரு பிரிவினர் காலையில் இருந்து என்னிடம் வம்பிழுத்தனர். மதிய உணவு இடைவேளையின்போது, நான் நஜ்முல் சாண்டோ, மொமினுல் ஹக் ஆகியோரின் பெயரைக் கத்த ஆரம்பித்தேன். அப்போது, சிலர் என்னைத் தள்ள ஆரம்பித்தனர். அத்துடன் நான் வைத்திருந்த புலி சின்னம் மற்றும் கொடியை கிழிக்க முயன்றனர். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர்” எனத் அதில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.

டைகர் ராபி
137 ஆண்டில் முதல் அணியாக பிரமாண்ட சாதனை! பாகிஸ்தானை 2-0 என ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த வங்கதேசம்!

இதுகுறித்து பேசிய கல்யாண்பூர் ஏசிபி அபிஷேக் பாண்டே, “நீரிழப்பு காரணமாக அவர் சரிந்து விழுந்தார். போலீஸாரும் மருத்துவ ஊழியர்களும் உடனடியாக அவருக்கு உதவினர். மேலும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் இப்போது நலமுடன் உள்ளார். அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது முற்றிலும் ஆதாரமற்றது; அவர் எந்த ரசிகராலும் தாக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வங்கதேசத்தில் நடைபெற்ற உள்நாட்டு வன்முறை காரணமாக, இந்துக் கோயில்கள் மற்றும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இணையங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்து அமைப்புகள் வங்கதேச அணி வீரர்களை கான்பூரில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால் பிசிசிஐ தரப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு திட்டமிட்டபடி போட்டி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைகர் ராபி
வங்கதேசம்|வன்முறையை எதிர்கொள்ளும் இந்துக்கள்.. இடைக்கால அரசு சொல்வது என்ன? கிடைக்குமா தீர்வு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com