ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில்லின் சதத்தால் வலுவான நிலையை தொட்டது. 3வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 42 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தது.
சதம் விளாசிய விராட் கோலி!
நான்காவது நாளான இன்று விராட் கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஜடேஜா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் ஸ்ரீகர் பாரத் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. பாரத்தும் தன்னுடைய பங்கிற்கு 88 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அரைசதத்தை கோட்டைவிட்டு ஆட்டமிழந்தார். பின்னர், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் அக்ஸர் பட்டேல். இதற்கிடையில் 241 பந்துகளில் சதம் அடித்தார் விராட் கோலி.
பட்டையை கிளப்பிய அக்ஸர் பட்டேல்!
400 ரன்களை கடந்த பின்னர் விராட் கோலியும், அக்ஸர் பட்டேலும் அதிரடியில் இறங்கினர். அவ்வவ்போது பவுண்டரிகளை விளாசினர். அக்ஸர் பட்டேல் சிக்ஸர் பறக்கவிட்டார். விராட் கோலி 150 ரன்களை கடந்த நிலையில், அக்ஸர் பட்டேல் அரைசதத்தை கடந்து சிக்ஸர் மழை பொழிந்தார். அக்ஸரின் அதிரடியாக ரன் வேகமாக உயர்ந்தது.
ஆட்டமிழந்த அக்ஸர்.. ஆல் அவுட் ஆன இந்தியா!
அதிரடியாக விளையாடி வந்த அக்ஸர் பட்டேல் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 5 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அக்ஸர் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் ரன் வேகவேகமாக உயர்ந்தது. பின்னர், ரவிசந்திரன் அஸ்வின் 7 ரன்களில் ஆட்டமிழக்க, உமேஷ் யாதவும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் முகமது ஷமி களமிறங்கினார். எப்படியாவது இரட்டை சதம் அடிக்கும் முனைப்பில் விராட் இருந்தார். ஆனால், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த களத்தில் யாரும் நீடிக்கவில்லை. அதனால், கடைசியாக அவரும் 186 (364) ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 15 பவுண்டரிகளை அடித்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 571 ரன் எடுக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஸ்ரேயாஸ் விளையாடவில்லை!
காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐய்யர் விளையாடவில்லை. இறுதிவரை எப்படியாவது ஸ்ரேயாஸ் களத்திற்கு வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரால் களமிறங்க முடியவில்லை. அதனால், ஒரு விக்கெட்டை இந்திய அணி பயன்படுத்த முடியாமல் போனது. இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. 5 ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி நாளில் என்ன ஆகும்?
ஆட்டத்தின் கடைசி நாளான நாளைய தினம் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி கிட்டதட்ட டிராவை நோக்கி செல்வதாகவே தெரிகிறது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி விரைவில் ஆல் அவுட் செய்து போட்டியை வெல்ல இந்திய அணி நிச்சயம் முயலும். அதேபோல், ரிஸ்க் ஸ்கோரை தாண்டிய பின்னர் டிக்ளர் செய்து இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி முயல வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணி டிராவை நோக்கியும், இந்திய அணி வெற்றியை நோக்கியும் ஆட்டத்தை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள்.