“இப்போதுதான் தோனியின் அவசியத்தை இந்தியா உணரும்” - முகமது கைஃப்
இதுப்போன்ற நேரங்களில் தான் ஸ்டம்பிங்கிற்கு தோனியின் அவசியத்தை இந்தியா உணரும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 143 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 95 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டையும் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டையும் சாய்த்தனர்.
இதனையடுத்து, 359 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் எடுப்பதற்கு பின்ச், மார்ஷ் விக்கெட்களை பறிகொடுத்தது. இருப்பினும், கவாஜா, ஹண்ட்ஸ்கோம்ப் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, சீரான வேகத்தில் ரன்களை அடித்தனர். இந்த ஜோடியை ஆட்டமிழக்க செய்த இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. அதனால், இந்திய அணி வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலியா பக்கம் சாய்ந்தது.
ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. டர்னர் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 84 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முக்கிய ஸ்டம்பிங்க் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். ஃபீல்டிங்கிலும் நாங்கள் தோல்வியடைந்தோம். நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. கடினமாக உழைத்து இன்னும் தீவிரத்துடனும், ஆர்வத்துடனும் வந்து அடுத்த போட்டியை வென்று, தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்” என்றார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், “சமீபகாலத்தில் இந்தியாவின் மிக கேவலமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இது. கைக்கு வந்த கேட்சுகளை கோட்டை விட்டனர். இதுப்போன்ற நேரங்களில் தான் ஸ்டம்பிங்கிற்கு தோனியின் அவசியத்தை இந்தியா உணரும். எனினும் பாராட்டியே ஆக வேண்டும், அசத்தலாக ஆடினார் டர்னர்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.