அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தடை உத்தரவால் நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் பஹாத் பாபர் மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிலிருந்து அவசரமாக நாடு திரும்பினார்.
சிரியா, லிபியா உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க 90 நாட்களுக்குத் தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக உலகின் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தநிலையில், ட்ரம்ப்பின் தடை உத்தரவால் ஐசிசி அமெரிக்காஸ் அணிக்காக விளையாடி வரும் வீரர் பஹாத் பாபர் பாதிக்கப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்தார். இதனால் மேற்கிந்தியத் தீவுகளில் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நடத்தி வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த பாபர், உடனடியாக அமெரிக்கா திரும்பினார். பாகிஸ்தானின் பிறந்த பாபர், 14 வயதில் இருந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஐசிசி விதிமுறைப்படி 7 ஆண்டுகள் விசா கிடைக்கப்பெற்றுள்ள பாபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ட்ரம்ப் உத்தரவால் சிக்கல் ஏற்படும் என்று கருதியதால், அவர் நாடு திரும்பியதாக ஐசிசி அமெரிக்காஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.