இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி முதல் 5 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றியை பெற்றது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் தன்னுடைய முதல் தோல்வியை இந்தியா பதிவு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 337 ரன்கள் குவிக்க, பின்னர் விளையாடிய இந்திய அணி 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்களை சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு முக்கிய கட்டங்கள் உள்ளன. முதல் 10 ஓவர் மற்றும் கடைசி 5 ஓவர். 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும் போது பவர் பிளேவில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருக்க கூடாது. விராட் கோலி, ரோகித் சர்மா ஜோடி இன்னும் கொஞ்சம் அடித்துவிளையாடி இருக்க வேண்டும். அதேபோல், ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் தோனி - கேதர் ஜாதவ் ஜோடி சிங்கிள் எடுத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.