பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்றப் போட்டியில் அவர் 83 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதுவரை அந்த அணி விளையாடிய 4 போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மொத்தம் இரண்டு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் இரண்டு விக்கெட், சதம் அடித்ததன் மூலம் ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்கள் மட்டும், 250 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்பு ஜாக் காலிஸ், சானத் ஜெயசூர்யா, ஷகிப் அஃப்ரிதி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், இந்தப் பட்டியலில் ஷகிப் அல் ஹாசன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
6000 ரன், 250 விக்கெட் எடுத்தவர்கள்:-
ஷகிப் அல் ஹாசன் - 202 போட்டி
ஜேக் காலிஸ் - 221 போட்டி
சானத் ஜெயசூர்யா - 235 போட்டி
ஷகித் அப்ரிதி - 294 போட்டி
அதேபோல், இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷகிப் முதலிடம் பிடித்துள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 343 ரன்கள் எடுத்திருந்த ஆரோன் பின்சை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். ஷகிப் 380 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்தத் தொடரில் 5 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 322 ரன் என்ற இலக்கை நோக்கி பங்களாதேஷ் விளையாடியது. அந்த அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷகிப் 124, தாஸ் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.