ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி சிரமமானதாக இருக்கும் என்று இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சவுதாம்ப்டன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் பும்ரா, சாஹல் அற்புதமாக பந்துவீசினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் ஷிகர் தவான், விராட் கோலியின் விக்கெட்டை இழந்தாலும் கே.எல்.ராகுல், தோனி நிதானமாக ஆடி ஒத்துழைப்பு அளிக்க ரோகித் சர்மா சதம் அடித்தனர்.
இந்திய அணி தன்னுடைய அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகின்றது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 9 ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஆப்கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி பலத்துடன் உள்ளது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தான் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்த போதும், ஸ்மித், கவுல்டெர் நைலின் பொறுப்பான ஆட்டத்தால் 288 ரன்கள் குவித்தது. 150 ரன்கள் கூட எடுக்குமா? என்ற நிலையில் இருந்து மீண்டு பெரிய ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலிய அணி. அதேபோல், பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக உள்ள வெஸ்ட் இண்டீஸையும் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். “தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கிடைத்த நம்பிக்கை அனைத்தையும் அடுத்த போட்டிக்கு தக்க வைத்துக் கொள்ளுங்கள். ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. குறிப்பாக, ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடும். மைதானத்தில் பந்து அதிகமாக பவுண்ஸ் ஆகும். அதனால், ஆஸ்திரேலிய அணி அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
வார்னர், ஸ்மித் திரும்பியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பலம். ஐபிஎல் தொடரில் வார்னர் மிகவும் உடற் தகுதியுடன், மன உறுதியுடனும் காணப்பட்டார். ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும், இந்திய அணியும் நிச்சயம் சிறப்பாக செயல்படும்” என்று கூறியுள்ளார்.