உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 1983இல் கபில் தேவ் தலைமையிலான அணியும், 2011இல் தோனி தலைமையிலான இந்திய அணியும் கோப்பையை கைப்பற்றியது. 2003இல் கங்குலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான ‘ஆல் டைம் லெவன்’ இந்திய அணியை ஒன்றினை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக கபில் தேவ், துணை கேப்டனாக மகேந்திர சிங் தோனி உள்ளார். 11 பேர் கொண்ட அணியில் கேப்டன் விராட் கோலிக்கு இடமில்லை.
1.சச்சின் டெண்டுல்கர்
சச்சின் இல்லாமல் ஒரு இந்திய ட்ரீம் அணியை கற்பனை செய்ய முடியாது. உலகக் கோப்பை தொடர்களில் 2278 ரன்கள் குவித்துள்ளார். இதில், 6 சதம், 15 அரை சதங்கள் அடங்கும். பேட்டிங் ரன்ரேட் 56.95. இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரராக வலம் வந்தவர். 1996, 2003 மற்றும் 2011 உலகக் கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்தார்.
2. சவுரவ் கங்குலி
2003 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமையேற்று இறுதிப் போட்டியை கொண்டு சென்றார். இவர் உலகக் கோப்பை போட்டிகளில் 1006 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதம், 3 அரைசதம் அடங்கும். பேட்டிங் சராசரி 55.88 ரன்.
3. ராகுல் டிராவிட்
1999 உலகக் கோப்பை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். மூன்றாவது வீரராக களமிறங்கு அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை மேற்கொண்டார். இவர் உலகக் கோப்பை தொடரில் 860 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதம், 6 அரைசதம் அடங்கும். பேட்டிங் சராசரி 61.42 ரன்.
4. முகமது அமர்நாத்
1983 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி பெற உறுதுணையாக இருந்தவர். இவர் சிறந்த பந்துவீச்சாளராக செயல்பட்டார். உலகக் கோப்பை தொடரில் 16 விக்கெட் சாய்த்ததுடன், 254 ரன்களும் சேர்த்தார். குறிப்பாக 1983 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அதிக விக்கெட் சாய்த்தார்.
5. முகமது அசாருதீன்
மூன்று உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். மிடில் ஆர்டரில் சிறந்து விளங்கினார். அணியின் சிறந்த பினிஷராக இருந்தார். உலகக் கோப்பை தொடரில் 826 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 அரைசதம் அடங்கும்.
6. யுவராஜ் சிங்
இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். 2011இல் இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணம் இவரது பேட்டிங்தான். இவர் உலகக் கோப்பை தொடரில் 738 ரன்கள் அடித்துள்ளதோடு, 20 விக்கெட் சாய்த்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 82.71 ரன். 2003 தொடரிலும் இவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது.
7. மகேந்திர சிங் தோனி (துணை கேப்டன்)
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பராக திகழ்பவர் தோனி. 2011ம் ஆண்டு இந்திய அணிக்கு தலைமைதாங்கி உலகக் கோப்பையை பெற்று தந்தவர். 2015 உலகக் கோப்பை தொடரில், தோனி தலைமையிலான பலம் வாய்ந்த இந்திய அணி களமிறங்கியது. அரையிறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. உலகக் கோப்பை தொடரில் தோனி 507 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதம் அடங்கும்.
8. கபில் தேவ் (கேப்டன்)
தன்னுடைய ஆல்ரவுண்டர் திறமையால் இந்திய அணிக்கு 1983இல் உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். குறிப்பாக, 1983 உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 175 ரன்கள் குவித்தார். உலகக் கோப்பை தொடரில் இவர் 669 ரன்கள் குவித்துள்ளதுடன், 28 விக்கெட் சாய்த்துள்ளார்.
9. ஜவகல் ஸ்ரீநாத்
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக 1996, 1999 மற்றும் 2003 உலகக் கோப்பை தொடர்களில் திகழ்ந்தார். உலகக் கோப்பை தொடரில் இவர் 44 விக்கெட் சாய்த்துள்ளார்.
10. அனில் கும்ளே
இந்திய அணியின் சிறந்த சுழல்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர். 1996 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை சாய்த்தார். உலகக் கோப்பை தொடர்களில் 31 விக்கெட் சாய்த்துள்ளார்.
11. ஜாகீர் கான்
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக விளங்கினார். 2011 மற்றும் 2003 உலகக் கோப்பை தொடர்களில் இவரது பங்களிப்பு சிறப்பானது. இவர் உலகக் கோப்பை தொடர்களில் 44 விக்கெட் சாய்த்துள்ளார்.
இந்த அணியில் விராட் கோலி 12வது வீரராக உள்ளார்.
12. விராட் கோலி
2015 உலகக் கோப்பை தொடரில்தான் விராட் கோலி அறிமுகமானார். இந்தத் தொடரிலே இவர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 2 சதம், ஒரு அரை சதத்துடன் 587 ரன்கள் குவித்தார். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசினார்.