ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்தியாவின் கே.எல்.ராகுல் 19 இடங்கள் முன்னேறி 37-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நாட்டிங்கம் மற்றும் லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார். அதிலும் லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 129 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டார். அந்தப் போட்டியில் ராகுலுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பான ஆட்டத்துக்கு அடிப்படையில் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடக்க வீரர் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோர் முறையே 5, 6, 7-ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
அந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 2 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கும், முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் இடையே 8 புள்ளிகள் வித்தியாசமே உள்ளன.
முகமது சிராஜ் 18 இடங்கள் முன்னேறி 38-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சக வீரர் ஜஸ்பிரீத் பும்ரா ஓரிடம் சறுக்கி 10-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓரிடம் முன்னேறி 6-ஆவது இடத்துக்கு வர, சக வீரர் மார்க் வுட் 37-ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஆல்-ரவுண்டர்கள் பொறுத்தவரை, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஓரிடம் சறுக்கி 3-ஆவது இடத்தைப் பிடிக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 4-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.