டெஸ்ட் போட்டி தொடர்பான ஐசிசி தரவரிசை குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதன் தேர்வு எப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
சர்வதேச கிரிக்கெட் அணிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அமைப்பு தான் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள், அணிகளின் தரவரிசை, கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை இவை அனைத்தையும் ஐசிசி நிர்வாகம் தான் தீர்மானிக்கின்றது. இதுதவிர கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகள், மழை நேரத்தில் போட்டி தடைபட்டால் வெற்றியை முடிவு செய்வது, ஒரு வீரர் செய்யும் தவறுக்கு அபராதம் அல்லது தடை விதிப்பது இவையும் ஐஐசியின் அதிகாரம் தான்.
இத்தகைய ஐசிசி-யின் மீது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கெல் வாகன் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது ஐசிசி-யே குப்பை என்றும், அதன் டெஸ்ட் ரேங்கின் முறை சரியாக இல்லையென்றும் அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் ரேங்கிங்கை ஐசிசி எப்படி தேர்வு செய்கிறது என்ற முறையை காணலாம். ஐசிசி-யை பொறுத்தவரை ரேங்கிங் செய்வதற்கு என தனியாக ஒரு விதியை வகுத்துள்ளனர். இந்த முறைப்படி தான், டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கும், வீரர்களுக்கும் ரேங்குகள் வழங்கப்படுகின்றன.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, அணிகளின் பலத்திற்கு ஏற்றாற்போல புள்ளிகள் மாறுபடும். ஒரு அணி பலம் பொருந்திய அணியை வென்றால், அதற்கு கூடுதல் புள்ளிகளும், பலம் குறைந்த அணியை வென்றால் அதற்கு ஏற்றால்போல புள்ளிகளும் வழங்கப்படும். இரண்டு அணிகளும் சமமான பலத்தைக் கொண்டிருக்கும்போது வெற்றி தோல்விகளுக்கு ஏற்ப புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
விதிகளின்படி ஒரு அணி, ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் அதற்கு ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. போட்டி சமனில் முடியும்போது விளையாடும் இரண்டு அணிகளுக்கும் 0.5 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது. இந்த புள்ளிகள் ஒவ்வொரு போட்டியும் முடியும்போது வழங்கப்படாது. ஒரு தொடர் முழுவதும் முடிந்த பின்னரே புள்ளிகள் வழங்கப்படும். அத்துடன் தொடரை வெல்லும் அணிக்கு கூடுதலாக போனஸ் புள்ளி என ஒன்று வழங்கப்படும்.
உதாரணத்திற்கு இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, 2-1 என வென்றால், இந்திய அணிக்கு 4 புள்ளிகளும், நியூஸிலாந்து அணிக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும். அதாவது 2 போட்டிகளில் வென்றதற்காக இந்தியாவிற்கு 2 புள்ளிகளும், இரண்டு போட்டிகளை சமன் செய்தற்கு ஒரு புள்ளியும், தொடரை வென்றதற்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஒரு போட்டியில் வென்றதற்காக ஒரு புள்ளியும், இரண்டு போட்டிகளை சமன் செய்ததற்கு ஒரு புள்ளியும் நியூஸிலாந்து அணிக்கு வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி இந்த புள்ளிகள் வழங்கும் முறைக்கு குறிப்பிட்ட கால வரையறைகளும் உள்ளன. அதன்படி, ஒரு அணிக்கான புள்ளிகளின் மதிப்பீடு குறைந்தபட்சம் 36 மாதங்கள் தொடங்கி, அதிகபட்சமாக 48 மாதங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அத்துடன் 36 மாதங்களில் கடந்த 12 மாதங்களின் மதிப்பீடு நூறு சதவிகிதமும், அதற்கு முந்தைய 24 மாதங்களின் மதிப்பீடு 50% மட்டுமே எடுக்கொள்ளப்படும். உதாரணத்திற்கு இந்திய அணியின் 2019ஆம் ஆண்டின் புள்ளிகளை கணக்கிடும்போது, 2018ஆம் ஆண்டின் புள்ளிகள் முழுவதுமாகவும், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளின் புள்ளிகள் 50% ஆகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதுதவிர நடப்பு ஆண்டின் புள்ளிகளும் கணக்கில் கொள்ளப்படும்.