இனவெறி பேச்சின் எதிரொலியாக அடுத்துவரும் 4 போட்டிகளுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது விளையாடத் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வென்றது. இதைத்தொடர்ந்து 2வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு மூன்றாவது வீரராக களமிறங்கிய, வான்டர் டஸ்செனும் பெலுகுவாயோவும்தான் காரணம். இவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன் அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்?’’ என இந்தியில் பேசியுள்ளார். அவரின் பேச்சு ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது.
சர்ப்ராஸ் அகமதுவின் இந்த இனவெறி பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்தது. மேலும் சர்பிராஸின் இத்தகையை பேச்சுகளை ஆதரிக்கப்போவதில்லை எனவும் கூறியது.
இதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில்லை. யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இனி இதுப்போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன், “நாங்கள் சர்பிராஸ் அகமதுவை மன்னித்து விட்டோம். ஆனால் ஐ.சி.சி. அவரை சும்மா விடாது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்துவரும் 4 போட்டிகளுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது விளையாடத் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்து வரும் 2 ஒரு நாள் போட்டிகளிலும், இரு டி20 போட்டிகளிலும் சர்பாரஸ் அகமது விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.