உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்ததெந்த ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது என்பதை காணலாம்.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த உலகக் கோப்பை தொடரில் போட்டியை மாற்றும் அளவிற்கு முக்கிய பங்களிக்கும் நபர்களாக இருப்பவர்கள் ஆல்ரவுண்டர்கள் தான். ஏனென்றால் அனைத்து அணிகளிலுமே சிறந்த ஆல்ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக வலம் வருகிறார். இளம் வீரரான இவர், பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக விளையாடுகிறார். விக்கெட்டுகள் விழாத நேரத்தில் எதிரணியின் விக்கெட்டை பறிக்கும் இவர், இந்திய அணி விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நேரத்தில் இறங்கி அதிரடியை காட்டுவதால் இவரால் சில போட்டிகள் வெற்றிக்கு மாறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது இவருக்கு கூடுதல் பலமாக அமையும். இவரைத் தவிர கேதர் ஜாதவ் இந்தியாவிற்கு கூடுதல் பலமாக உள்ளார். பேட்டிங்கில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விக்கெட்டை எளிதில் இழக்காமல் நிலைத்து ஆடும் திறன் கொண்டவராக ஜாதவ் உள்ளார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பையில் ஜொலிப்பார். ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடக் கூடியவர். அண்மைக்காலமாக இவரின் ஃபீல்டிங்கும் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
ஸ்டோக்ஸை விட சற்று அதிகம் பெர்ஃபார்ம் செய்யும் நபராக மொயின் அலி இருப்பார். இவரது சுழல் பந்துவீச்சு இங்கிலாந்து மண்ணில் நன்றாகவே திரும்புகிறது. அத்துடன் பேட்டிங்கிலும் அனுபவ வீரரை போன்று அலி விளையாடிக்கொண்டிருக்கிறார்.
தென் ஆப்ரிக்கா அணியில் கிரிஸ் மோரிஸ் முக்கிய பங்களிப்பை அளிப்பார். பவுலிங்கில் அனுபவமுள்ள முன்னணி பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தும் திறன் கொண்டவராக மோரிஸ் உள்ளார். அத்துடன் பேட்டிங்கில் சில பந்துகள் விளையாடினாலும், அதிரடியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராக இவர் திகழ்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரூ ரஸல் மற்றும் கார்லஸ் பிராத்வொயிட் ஆகியோர் தனித்துவம் பெற்று விளங்குவார்கள். ஆண்ட்ரூ ரஸல் ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடியை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் 50 ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளில் இந்த அதிரடி எடுபடாது. ஆனாலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இவர் வெற்றி முகம் காணலாம். அத்துடன் 20 ஓவர்கள் போட்டிகளில் எடுபடாத இவரது பந்துவீச்சு 50 ஓவர்கள் போட்டிகளில் நன்றாகவே எடுபடும்.
ரஸல்லை விட வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக திகழ்பவர்கள் கேப்டன் ஜாசன் ஹோல்டர் மற்றும் பிராத்வொயிட். தற்போது உள்ள சர்வதேச ஆல்ரவுண்டர்களில் முதல் ரேங்கில் உள்ளவர் இவர் தான். இவரது பவுலிங் மற்றும் பேட்டிங் அதிரடி எந்த அணிக்குமே சவாலாக இருக்கும். பிராத்வொயிட் ஐபிஎல் போட்டியில் பிரகாசிக்கவில்லை என்றாலும், உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே ரஸலை மிஞ்சுவார்.
பாகிஸ்தானில் அனுபவமுள்ள ஆல்ரவுண்டர்கள் என யாரையும் குறிப்பிட முடியாது. ஆனாலும் பவுலிங் ஆல்ரவுண்டரான இமாத் வாசிம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் இவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாவதாகவே உள்ளது. பேட்டிங்கிலும் இவர் குறிப்பிடத்தகுந்த வகையில் திகழ்கிறார்.
நியூசிலாந்து அணியில் கோலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் உலகக் கோப்பையில் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணியில் இடம்பெற்ற கிராண்ட்ஹோம் பெரிதாக சாதிக்கவில்லை. அவர் சாதிக்கவில்லை என்று சொல்வதை விட, பெங்களூர் அணி அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தான் கூறவேண்டும். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அதிரடி என இவர் தனது ஃபார்மை இழக்காமலே உள்ளார். இதேபோன்று ஜெம்ஸ் நீஷம் பவுலிங்கில் சிறந்த ஃபார்மில் உள்ளார். பேட்டிங்கிலும் இவர் இறுதி நேரத்தில் கைகொடுக்க கூடியவர் என்பதால், ஆட்டத்தின் போக்கை மாற்றலாம்.
இலங்கை அணியில் அனுபவ வீரராக இருக்கும் ஏஞ்சலோ மேத்திவ்ஸ் திறம்பட விளையாடலாம். பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே இவர் நன்றாக விளையாடக்கூடியவர். இலங்கை அணி தொடர் தோல்விகளால் முடங்கியுள்ளதால், அந்த அணியில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரராகவும், கேட்பனுக்கு அறிவுரை வழங்கும் நபராகவும் இருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். இவரது அதிரடியை சமாளிக்க முடியாமல் அனைத்து அணிகளுமே திறனுகின்றன. அனைத்து முன்னணி வீரர்களின் பந்துவீச்சை சிதறடிக்கக்கூடியவர் இவர். பவுலிங்கில் ஸ்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை மேக்ஸ்வெல் தக்க வைத்துள்ளார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைகுரிய வீரர்களில் ஒருவராக மாறி வருகிறார். இவர் ஒரு போட்டியில் பேட்டிங்கில் நன்றாக பெர்ஃபார்ம் செய்தால், அடுத்த போட்டியில் பவுலிங்கில் பெர்ஃபார்ம் செய்பவராக இருக்கிறார்.
ஆஃப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பெரிதும் கலக்காமல் போனாலும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி கண்டிப்பாக கலக்குவார். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இவர் வேகமாக வளர்ந்துள்ளார். இவரது ஸ்பின்னை அடிப்பதற்கு முன்னணி பேட்ஸ்மேன்களே சிரமப்படுகின்றனர். அத்துடன் முன்னணி பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் பேட்டிங் திறனும் நபி களத்தில் விளையாடி வருகிறார்.
சர்வதேச ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவர் பங்களாதேஷ் அணியின் ஷாகிப் அல் ஹாசன். இவரது பவுலிங்கில் சற்று கவனம் தவறினாலும் விக்கெட்டு தான். அந்த அளவிற்கு பவுலிங்க் மூலம் எதிரணியை மிரட்டும் திறன் கொண்டவராக ஷாகிப் வலம் வருகிறார். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஷாகிப் பங்களாதேஷ் அணி பக்கபலமாக இருக்கிறார். அதிரடியாக விளையாடும் இவர், தேவைப்பட்டால் நிலைத்து விளையாடும் தன்மையும் கொண்டவராக உள்ளார்.